தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-06-12 22:15 GMT
ஈரோடு

பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பவானி ஆறு வழியாக கொடிவேரி அணைக்கு வருகிறது. அங்கிருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த வாய்க்கால்கள் மூலமாக 24 ஆயிரத்து 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல்போக நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் இந்த ஆண்டு வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிபடியாக உயர்ந்து வருகிறது. எனவே தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுதொடர்பாக தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதி ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல்போக நன்செய் பாசனத்திற்காக பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் பவானிசாகர் அணையின் நீர் இருப்பு குறைவாக இருந்தது. தற்போது அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டி உள்ளது. மேலும், அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழையும் தொடங்கி இருப்பதால் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் பாசனத்துக்கு வருகிற 15-ந் தேதி (அதாவது நாளை மறுநாள்) தண்ணீர் திறந்து விட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்