மதுரையில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த ரே‌ஷன் கடை ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை

மதுரையில் ரே‌ஷன் கடைக்குள் புகுந்து ஊழியரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த 9 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-06-12 23:15 GMT

மதுரை,

மதுரை காமராஜர்புரம், பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 40). அ.ம.மு.க. வட்ட செயலாளரான இவர் காமராஜர்புரம் கீழ்மதுரை ரெயில் நிலையம் அருகே உள்ள ரே‌ஷன் கடையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் 9 பேர் கொண்ட கும்பல் ரே‌ஷன் கடைக்கு வந்தது.

அந்த கும்பல் முனியசாமியிடம் தகராறு செய்து, கடையின் உள்ளே சென்று அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதில் கடையின் உள்ளேயே ரத்த வெள்ளத்தில் முனியசாமி துடி துடித்து இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டது. கடைக்கு ரே‌ஷன் பொருட்கள் வாங்க வந்தவர்கள் நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடினர்.

தகவல் கிடைத்தும் போலீஸ் துணை கமி‌ஷனர் சசிமோகன் தலைமையில் கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் முனியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இறந்து போன முனியசாமிக்கு சுமதி என்ற மனைவியும், 7 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். இவர் மீது போலீசில் எவ்வித வழக்கும் இல்லாததால் கொலைக்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் கொலை நடந்த பின்னர் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பெண்ணுடன் வந்து கொலையாளியை அடையாளம் காட்டிவிட்டுச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே பெண் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்