வேலை வழங்கக்கோரி தற்கொலை எண்ணத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி

அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கலெக்டர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-12 21:30 GMT

விருதுநகர், ஜூன்.13–

வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 31). இவரது மனைவி பார்வதி (27). இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு ஷியாமளா(4) என்ற பெண் குழந்தையும், 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சின்னத்தம்பி கடந்த 2014–ம் ஆண்டு முதல் அரசு உதவித்தொகை பெற்று வருகிறார். இவர் தனக்கு அரசு வேலை வழங்கக்கோரி கடந்த 1998–ம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து வருகிறார். ஆனால் இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். தனக்கு அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்கவே போலீசார் சின்னத்தம்பியையும் அவரது குழந்தைகளையும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர். அதிகாரிகள் அவரது கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சின்னத்தம்பியையும் அவரது குழந்தைகளையும் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்