போலி ஆவணம் தயாரித்த வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அரவிந்தர் ஆசிரமவாசி கைது

போலி ஆவணம் தயாரித்த வழக்கில் 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து ஆசிரமவாசியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2018-06-12 23:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியைச் சேர்ந்தவர் மீர் சுல்தான் மொகுதீன். அவரது சகோதரி சாத்துனிசா பேகம். இவர்களுக்கு வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகில் 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த 2011–ம் ஆண்டு புதுச்சேரி வைத்திக்குப்பம் அக்காசாமி மடம் வீதியை சேர்ந்த அரவிந்தர் ஆசிரமவாசியான ரஜினிஸ் ராய்குமார் (வயது 48), மதியழகன் ஆகியோர் போலி பத்திரம் தயாரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி மாதம் மீர் சுல்தான் மொகுதீனுக்கு சொந்தமான இடத்திற்கு 3 பேர் சேர்ந்து வில்லங்க சான்றிதழ் பெற போலி ஆவணங்கள் தயாரித்து இதனை புதுவை சாரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலத்தில் பதிவு செய்ய கொடுத்துள்ளனர். அப்போதைய சார் பதிவாளர் அன்பழகன் அதனை ஆய்வு செய்த போது அது போலியானது என்பது தெரியவந்தது.

உடனே அவர் இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாஸ்பேட்டை சாந்தி நகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (33), ஆசிரமவாசியான ரஜினிஸ் ராய்குமார்(48), லாஸ்பேட்டை அன்னை நகரை சேர்ந்த இளங்கோ ஆகிய 3 பேரும் சேர்ந்து போலியான வில்லங்க சான்றிதழ் தயாரித்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை வலைவீசி தேடிவந்தனர். இதில் ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த ரஜினிஸ்ராய் குமார் வைசியால் வீதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை நேற்று மாலை புதுச்சேரி 2–வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தனலட்சுமி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ரஜினிஸ் ராய்குமார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இளங்கோவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்