தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி 70 பேர் கைது

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்கக்கோரி திருவாரூரில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-12 22:45 GMT
திருவாரூர்,

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாக தனியார் பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும். அரசு பள்ளிகள் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சாலை கல்பாலம் அருகில் திரண்டனர். அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை சங்க மாநில தலைவர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சத்தியசீலன், ஆனந்த், மாரிமுத்து, கவிதா, சிவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்திற்கும், போராட்டத்திற்கும் போலீசார் அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மாணவர் சங்கத்தினரை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் 2 மாணவிகள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்