கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டக்கோரி கைகளில் செங்கல் ஏந்தி, கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டக்கோரி கைகளில் செங்கல் ஏந்தி கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-12 22:45 GMT
காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.ஆதனூருக்கும், நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடி மதிப்பில் கதவணை கட்டப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை கதவணை கட்டுவதற்கான பணிகள் ஏதும் நடைபெறவில்லை. கதவணை கட்டக்கோரி கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் ம.ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கைகளில் செங்கல்லுடன் கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி தடுப்பணை கட்டக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், ஜீவகன், சின்னதுரை, கணேசன், செந்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்