குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு தீ வைப்பு

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நிறுத்தப் பட்டிருந்த அரசு பஸ்சுக்கு தீ வைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-06-12 23:00 GMT
குறிஞ்சிப்பாடி

பண்ருட்டி அரசு போக்கு வரத்துக்கழக பணிமனைக்கு சொந்தமான அரசு டவுன் பஸ் (வழித்தடம் 19) ஒன்று பண்ருட்டியில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் இரவு 11 மணிக்கு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பண்ருட்டிக்கு புறப்பட்டு செல்லும்.

அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் இருந்து அரசு டவுன் பஸ் பயணிகளுடன் குறிஞ்சிப்பாடி நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை திருநாவுக்கரசு ஓட்டினார். கண்டக்டராக பரசுராமன் என்பவர் பணியில் இருந்தார். அந்த பஸ் இரவு 11 மணிக்கு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்துக்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய 2 பேரும் வழக்கம்போல் பஸ்சுக்குள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில் டயர் எரிந்து புகை நாற்றம் வருவதை உணர்ந்த டிரைவரும், கண்டக்டரும் உடனே கீழே இறங்கி வந்து பஸ்சை பார்த்தனர். அப்போது பஸ்சின் வலது புற பின்பக்க டயர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 2 பேரும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் மணலை கொட்டியும், தண்ணீரை ஊற்றியும் தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாற்று டயர் பொருத்தப்பட்டு அந்த பஸ் அங்கிருந்து பண்ருட்டி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பஸ் எரிந்தபோது அருகில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் அரசு பஸ்சுக்கு மர்மநபர்கள் யாரோ? தீ வைத்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பஸ் நிலைய பகுதி மற்றும் வணிக வளாகங்களில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் அரசு பஸ்சுக்கு தீ வைத்து சென்ற மர்மநபர் களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். டயர் கருகியதை உணர்ந்த டிரைவரும், கண்டக்டரும் சுதாரித்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கியதால், பஸ் முழுவதும் எரிவது தவிர்க்கப் பட்டது. மேலும் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார் கள்.

இந்தநிலையில் தீ வைக்கப்பட்ட அரசு பஸ்சை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார் கூறுகையில், அரசு பஸ்சுக்கு தீவைத்த மர்மநபர் கள் யார் ? என்று விசாரித்து வருகிறோம். கூடிய விரைவில் அவர்கள் யார்? என கண்டு பிடித்து கைது செய்யப்படு வார்கள் என்றார்.

மேலும் செய்திகள்