கடத்தப்பட்ட மாணவியை கண்டுபிடிக்கக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி

தேனியில் கடத்தப்பட்ட மாணவியை கண்டுபிடிக்கக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-06-12 23:00 GMT
தேனி

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பண்ணைத்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 46). இவர், சாலையோரம் கம்பங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி அன்னக்கொடி (41). இவர்களுக்கு பிரியங்கா (17) என்ற மகளும், செல்வராஜ் (16) என்ற மகனும் உள்ளனர்.

பிரியங்கா பிளஸ்-2 முடித்துள்ளார். சமீபத்தில் அவரை தேனி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்புக்கு ராஜா சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 10-ந்தேதி ராஜா தனது மனைவியுடன் வீரபாண்டிக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது வீட்டில் இருந்த பிரியங்கா மாயமானார்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜா நேற்று காலையில் தனது மனைவி, மகனுடன் தேனி நேரு சிலை சிக்னல் பகுதிக்கு வந்தார்.

திடீரென அவர் தனது கையில் எடுத்து வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தனது மீதும், தனது மனைவி, மகன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த தேனி போலீசார் அவர்கள் 3 பேரையும் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையின் போது, தனது மகளை டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாகவும், போலீசார் கண்டுபிடிக்காமல் தாமதம் செய்து வருவதால் தீக்குளிக்க முயன்றதாகவும் ராஜா தெரிவித்தார். இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக ராஜா உள்ளிட்ட 3 பேர் மீதும் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்