தேவாரம் அருகே காட்டு யானை தாக்கி காவலாளி சாவு

தேவாரம் அருகே, தென்னந்தோப்புக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-06-12 23:00 GMT
தேவாரம்

தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பெரும்பு வெட்டி ஓடை அமைந்துள்ளது. இதன் அருகே, சிங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, தேவாரத்தை சேர்ந்த சேகர் (வயது 55) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல அவர் காவல் பணியில் ஈடுபட்டார். இரவில், தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் அறையின் வராண்டாவில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணியளவில், ஒரு காட்டுயானை தென்னந்தோப்புக்குள் புகுந்தது. பின்னர் கட்டிலோடு அவரை தூக்கியது. இதனால் கண்விழித்த சேகர், தன் முன்னே யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கட்டிலை அவர் இறுக பற்றிக்கொண்டார்.

ஆனால் அந்த யானை, அவரோடு சேர்த்து கட்டிலை 10 மீட்டர் தூரத்துக்கு தூக்கி சென்றது. பின்னர் அந்த கட்டிலை போட்டு உடைத்தது. இதனால் கீழே விழுந்த சேகர், யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். இருப்பினும் யானை அவரை விரட்டி பிடித்தது. பின்னர் அவரை, தும்பிக்கையால் தரையில் தூக்கி அடித்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் சேகரின் சட்டை, வேட்டியை கிழித்து எறிந்த யானை அவரை மிதித்து கொன்றது.

இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக தோட்டத்துக்கு சென்ற கூலித்தொழிலாளிகள், யானை மிதித்து சேகர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் கவுதம், உத்தமபாளையம் தாசில்தார் பாலசண்முகம், போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முயன்றனர். இதற்கு சேகரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேவாரம் பகுதியில் காட்டு யானை பயிர்களை நாசம் செய்து வருவதாகவும், யானையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தோம். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சேகரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் சம்பவ இடத்துக்கு கலெக்டர் நேரடியாக வரவேண்டும். அப்போது தான், சேகரின் உடலை எடுக்க அனுமதிப்போம் என்று கூறினர். இதனையடுத்து வனத்துறை, வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்துக்குள் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சேகரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி பெற்றுத்தரப்படும் என்றும் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் எழுதி கொடுத்தனர். அதன்பின்னரே சேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து லாரி மூலம் வேறு மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனஅலுவலர் கவுதம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்