சேலம் மாநகரில் மீண்டும் அதிரடி நடவடிக்கை: ஹெல்மெட் அணியாமல் சென்ற 280 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

சேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது போலீசார் மீண்டும் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 280 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Update: 2018-06-12 23:16 GMT
சேலம்,

சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சாலை விபத்துகளில் உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சேலம் மாநகரில் ஏற்கனவே ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக இதை போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

அதன்படி சேலம் மாநகரில் நேற்று முதல் மீண்டும் ஹெல்மெட் சோதனை அதிரடியாக தொடங்கியது. சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் நிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

இதேபோல் மாநகரில் பல இடங்களில் போலீசார் சோதனை நடைபெற்றது. இந்த திடீர் சோதனையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் போலீசாரை கண்டதும் வாகனங்களை திருப்பி வேறு பக்கமாக சென்றதை பார்க்க முடிந்தது. சேலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 280 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்