வாக்குறுதியை நிறைவேற்ற மோடி அரசு தவறி விட்டது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்ற தவறிவிட்டது என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

Update: 2018-06-12 23:49 GMT
மும்பை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று மும்பை வந்தார். அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந் தனர்.

மும்பை வந்த அவரை வரவேற்க ஆயிரம் டிரைவர்கள் தங்கள் ஆட்டோக்களில் வந்திருந் தனர். அவர்களுக்கு ராகுல் காந்தி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் கோரேகாவில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடினார். மேலும் கட்சியின் தொண்டர்கள், மேல்மட்ட தலைவர்களுடன் எளிதாக தகவல் தொடர்பில் இருக்க உதவும் ‘சக்தி’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சீன நாடு 24 மணி நேரத்திற்குள் சுமார் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக தகவல்கள் சொல்கிறது. அதேநேரத்தில் நமது நாட்டில் பா.ஜனதா தலைமையிலான அரசு வேறும் 450 வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்குகிறது.

நமது பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆண்டிற்குள் இளைஞர்களுக்காக 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இன்று மாநிலங்களவையில் அவரது மந்திரியே கடைசி 8 ஆண்டுகளில் வேலைவாய்ப் பின்மை பலமடங்கு அதிகரித்திருப்பதாக ஒப்புக்கொள்கிறார். மோடி அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது.

கடன் தள்ளுபடி

பா.ஜனதா தலைமையி லான அரசு இந்தியாவின் 15 முதல் 20 இடத்திற்குள் இருக்கும் மிகப்பெரிய செல்வந்தர்களுக்கு ரூ.2½ லட்சம் கோடி வரை கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் கடன் தள்ளுபடி கோரிக்கையை ஏழை விவசாயிகள் முன்வைத்தால் அதை அரசு சுத்தமாக மதிப்பதில்லை.

இதுகுறித்து கேட்டால் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது தங்கள் கொள்கை இல்லை, என்கிறார். நம் விவசாயிகளை சற்று ஊக்கப்படுத்தினால் அவர்கள் சீன நாட்டுடன் போட்டியிடும் திறன் படைத்தவர்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

மேலும் செய்திகள்