மாங்காடு அருகே டிரைவரை தாக்கி கார் கடத்தல்; ஒருவர் கைது

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 33). கால்டாக்சி டிரைவர். நேற்று அதிகாலை காரை ஒரு நபர் புக் செய்தார்.

Update: 2018-06-13 00:29 GMT
பூந்தமல்லி,

அதனை தொடர்ந்து வாடிக்கையாளரை அழைத்து செல்ல மாங்காடு அடுத்த பரணிபுத்தூருக்கு செல்வம் காரை ஓட்டி சென்றார்.நீண்ட நேரம் ஆகியும் வாடிக்கையாளர் வராததால் அந்த புக்கிங்கை ரத்து செய்து விட்டு மதுரவாயல்- தாம்பரம் பைபாசின் சர்வீஸ் சாலை பரணிபுத்தூரில் காரை நிறுத்தி விட்டு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்வத்தை சரமாரியாக தாக்கி காரை கடத்தி சென்று விட்டனர்.

இதில் காயம் அடைந்த செல்வம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போரூர் உதவி கமிஷ்னர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சார்லஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்த டிரைவர் செல்வத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மேலும் காரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி மூலம் கார் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரின் அருகே சென்றபோது மர்ம நபர்கள் காரை வேகமாக எடுத்து சென்றனர். உடனே போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர்.

இதையடுத்து போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க காரை ஓரமாக நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் தப்பி செல்ல முயன்றனர். இதில் மாங்காட்டை சேர்ந்த அப்துல் அமீது (21), என்பவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடத்தப்பட்ட காரை போலீசார் மீட்டனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட காரை 3 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்