லாரியை விற்றுவிட்டு மாயமானதாக பொய் புகார் கூறியவர் கைது

நிதிநிறுவனத்தில் கடன் பெற்று வாங்கிய லாரியை மற்றொருவருக்கு விற்றுவிட்டு, லாரி மாயமானதாக பொய்புகார் கூறியவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேரும் சிக்கினர்.

Update: 2018-06-12 22:45 GMT

அச்சரப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணி (வயது 47), லாரி உரிமையாளர். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அழகுவேலு (37) என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மணி ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் அவர், திண்டிவனம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிரைவர் அழகுவேலு சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. மர்மநபர்கள் லாரியை திருடிச்சென்று விட்டனர். லாரியை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். லாரியின் பதிவு எண்ணை வைத்து சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது மாயமானதாக கூறப்படும் லாரி குறிப்பிட்ட நாளில் நெடுஞ்சாலைப்பகுதியில் வரவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து மணியையும், அழகுவேலையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது இருவரும் லாரியை விற்றுவிட்டு மாயமானதாக போலீசில் பொய் புகார் கூறியது தெரியவந்தது. மேலும் அந்த லாரியை நிதிநிறுவனம் மூலமாக கடன் பெற்று மணி வாங்கியதும் தெரியவந்தது.

இதனையடுத்து மணி, டிரைவர் அழகுவேலு, லாரியை விலைக்கு வாங்கிய சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (42), உடந்தையாக இருந்த அருணாசலம் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்