சேலம் அரசு மகளிர் கல்லூரியில் கலந்தாய்வுக்கு அழைக்கக்கோரி மாணவிகள் கலெக்டரிடம் மனு

சேலம் அரசு மகளிர் கல்லூரியில் கலந்தாய்வுக்கு அழைக்கக்கோரி மாணவிகள், கலெக்டர் ரோகிணியிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-06-13 23:00 GMT
சேலம்,

சேலம் கோரிமேட்டில் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் இளங்கலை கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளும், அதே போன்று முதுகலை பாடப்பிரிவுகளும் உள்ளன. தற்போது முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பித்து உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகள் பலர் தங்களது, பெற்றோர்களுடன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த பல நாட்களாக நடக்கிறது. ஆனால் இது வரை எங்களை கலந்தாய்விற்கு அழைக்கவில்லை. எங்களை புறக்கணிக்கின்றனர். எங்களுக்கு இடம் வழங்க மறுக்கிறார்கள். எனவே எங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் மற்ற பிரிவினருக்கு வழக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே கலந்தாய்வுக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகளான எங்களையும் அழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ரோகிணி, உங்களிடமும் விரைவில் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார்.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடம், வேறு பிரிவினருக்கு வழங்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் கட்டாயம் கலந்தாய்வின் மூலம் மாணவிகள் சேர்க்கை நடைபெறும். இது குறித்து மாணவிகள் கவலைப்பட வேண்டாம் என்று கூறினர். 

மேலும் செய்திகள்