மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் மகன் பலி

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி, அ.தி.மு.க. பிரமுகரின் மகன் பலியானார். திருமணமான 17-வது நாளில் நடந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2018-06-13 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணாடி பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழியின் 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் ஆவர்.

இவர்களது மகன் ராஜகுரு (வயது 27). இவர் டிப்ளமோ படித்துவிட்டு ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் தாழக்குடியை அடுத்த பூலாங்குழி பகுதியை சேர்ந்த மெர்லின் ஷீலா(24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. மெர்லின் ஷீலா தாழக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ராஜகுரு தினமும் காலையில் தனது மோட்டார்சைக்கிளில் மனைவியை அழைத்து சென்று பள்ளியில் விட்டு, மாலையில் அழைத்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மனைவியை அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ராஜகுரு சென்றார். அவர், ஆரல்வாய்மொழி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலை அடுத்த தோப்பூர் விலக்கு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜகுரு காரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுபற்றி அப்பகுதியினர் ராஜகுருவின் பெற்றோருக்கும், ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பெற்றோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி விரைந்து வந்தார். அப்போது, ராஜகுருவின் அருகில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரின் பதிவெண் பலகை கிடந்தது. உடனே, அதை கைப்பற்றி இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது அந்த கார் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் நடந்த 17-வது நாளில் அ.தி.மு.க. பிரமுகரின் மகன் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்