தடைக்காலம் முடிவதையொட்டி மீனவர்கள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்

தடைக்காலம் முடிவடைவதையொட்டி மாவட்ட மீனவர்கள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

Update: 2018-06-13 22:45 GMT
கோட்டைப்பட்டினம்,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்களுக்கான இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்திலும் இந்த தடை அமலில் இருந்தது. தடையையொட்டி விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லவில்லை. தடைக்காலம் என்பதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரைகளில் நிறுத்தி வைத்தி ருந்தனர்.

தடைக்காலம் அமலில் இருப்பதால் கடற்கரையோரங்களில் வலை பின்னுதல், அறுந்த வலைகளை சீரமைத்தல், படகுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க சீரமைப்புபணி உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் மீனவ சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதையொட்டி நாளை நள்ளிரவு (12 மணிக்கு பிறகு) முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல உள்ளனர். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. படகுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பராமரிப்பு பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், படகுகளில் ஐஸ் கட்டிகள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால் நாங்கள் உற்சாகத்துடன் காணப்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்