அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.

Update: 2018-06-13 22:30 GMT
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில்் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார்,வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

நீண்டவரிசையில் தரிசனம்

அதன்படி நேற்று அமாவாசை தினம் என்பதால் காலை 5 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கோவிலின் கிழக்கு பகுதியின் முன்புறத்தில் நெய்தீபங்கள் ஏற்றியும், கட்டண வரிசை, பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் போலீசாரும் மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர். இதே போல் இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமியை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்