மூதாட்டி அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம்: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - கலெக்டர் உத்தரவின்பேரில் நடவடிக்கை

குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2018-06-13 23:30 GMT
திருவண்ணாமலை,

மலேசியாவை சேர்ந்தவர்கள் மோகன்குமார், சந்திரசேகர். இவர்கள் கடந்த மாதம் சென்னைக்கு வந்தனர். மோகன்குமாரின் சித்தி ருக்மணி அம்மாள் (வயது 65), சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்தார். சென்னைக்கு வந்த மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி அவர்களுடன் ருக்மணி அம்மாள், அவரது மகளின் கணவரான சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போளூருக்கு காரில் வந்தனர்.

போளூரை அடுத்த தம்புகொட்டான்பாறை பகுதியில் காரை நிறுத்திய அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்ணிடம் முகவரி கேட்டனர். அப்போது அவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் சாக்லெட்டை கொடுத்து குழந்தைகளை கடத்த வந்திருக்கும் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என கருதி அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தாக்கினர். அங்கிருந்து தப்பிய அவர்கள் களியம் பகுதியில் வந்தபோது அவர்களின் காரை மடக்கி 5 பேரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ருக்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து 5 பேரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இதனால் அச்சமடைந்த களியம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், அத்திமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். சுமார் 1 மாதம் இந்த கிராமத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது தான் வெளியூர்களுக்கு சென்ற கிராமத்தினர் பலர் தங்களது கிராமத்திற்கு மறுபடியும் வந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மூதாட்டி உள்பட 5 பேரை தாக்கியதாக போளூர் போலீசார் 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் 44 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அதில் தம்புகொட்டான்பாறையை சேர்ந்த முத்து மகன் சிவா (29), அத்திமூரை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் (36), சாமிநாதன் மகன் பாபு (54) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பரிந்துரை செய்தார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டர்சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்