கவுரி லங்கேசை, பரசுராம் வாக்மோர் தான் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

பத்திரிகையாளர் கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டு கொன்றது பரசுராம் வாக்மோர் தான் என்பது சிறப்பு விசாரணை குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2018-06-13 23:06 GMT
பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், அவருடைய வீட்டின் முன்பு வைத்து கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து, சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.

இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மைசூருவை சேர்ந்த எழுத்தாளரான பகவானை கொலை செய்ய திட்டமிட்டதாக பிரவீன் என்ற சுஜீத் குமார், அமோல் காலே, பிரதீப், மனோகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேருக்கும் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் சிறப்பு விசாரணை குழுவினர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர் (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டார். பரசுராம் வாக்மோர் தான் கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் சந்தேகித்தனர். இதனால், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 14 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பரசுராம் வாக்மோரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, கவுரி லங்கேசை, பரசுராம் வாக்மோர் துப்பாக்கியால் சுட்டு கொன்றதை அவரே போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் அந்த துப்பாக்கியை இன்னொருவரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன், தன்னிடம் இருந்து துப்பாக்கியை பெற்று கொண்ட நபர் யார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கவுரி லங்கேசை கொலை செய்வதற்காக பெங்களூரு வந்த பரசுராம் வாக்மோர் சுங்கதகட்டேயில் உள்ள சுரேஷ் என்பவரின் வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. கைதான பரசுராம் வாக்மோர் ‘டைகர்‘ எனும் அமைப்பில் முக்கிய பங்கு ஆற்றியதும் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பானது இந்துக்களுக்கு எதிரானவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை குறிக்கோளாக கொண்டு இருப்பதும், வடகர்நாடக மாவட்டங்களான விஜயாப்புரா, தார்வார், பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த அமைப்பு ரகசியமாக செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த சுனில் மடிவாளப்பா (25) என்பவரை பிடித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்