வங்கதேச பெண்களை விபசாரத்தில் தள்ளிய 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

வங்கதேசத்தில் இருந்து வேலைக்காக பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-06-14 00:09 GMT
தானே,

கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தானே பொக்ரான் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் விபசாரம் நடப்பதாக குற்றத்தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் போலி வாடிக்கையாளர்களை அங்கு அனுப்பி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த ஓட்டலில் விபசாரம் நடந்து வருவது உறுதியானது.

இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி அந்த ஓட்டலில் இருந்து 5 பெண்களை மீட்டனர். மேலும் அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, வங்கதேசத்தில் இருந்து வேலை வாங்கி தருவதாக கூறி, பெண்களை மும்பைக்கு ஏமாற்றி அழைத்து வந்து கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்திய அப்துல்(வயது42), அவரது மனைவி சிவாலி(30), மைத்துனி நர்கிஸ் அப்துல்(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக தானே செசன்ஸ் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து தீ்ர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அவர்கள் மீது குற்றம் நிரூபணமானதால் 3 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்