கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி கூடுதல் கமிஷனர் கைது

கட்டுமான அதிபரிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கிய கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி கூடுதல் கமிஷனர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-06-14 00:12 GMT
அம்பர்நாத்,

கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி பகுதியில் கட்டுமான அதிபர் ஒருவர் சட்டவிரோதமாக 7 மாடி கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சஞ்சய் காரத்துக்கு புகார்கள் வந்தன. இந்தநிலையில், அவர் சம்பந்தப்பட்ட கட்டுமான அதிபரை சந்தித்து பேசி இருக்கிறார்.

அப்போது, அந்த கட்டிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ரூ.42 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என மிரட்டி உள்ளார்.

இதைக்கேட்டு கட்டுமான அதிபர் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அவர் ரூ.35 லட்சம் தருவதாக தெரிவித்தார்.

பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், அங்குள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். நேற்று அவர்கள் கொடுத்த யோசனையின்படி மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று கூடுதல் கமிஷனர் சஞ்சய் காரத்தை சந்தித்த கட்டுமான அதிபர் முதல் தவணையாக ரூ.8 லட்சம் கொண்டு வந்திருப்பதாக கூறி கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூடுதல் கமிஷனர் சஞ்சய் காரத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கூடுதல் கமிஷனர் லஞ்சம் வாங்கி சிக்கியது கல்யாண்- டோம்பிவிலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்