தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை கொடுத்தால் நடவடிக்கை: கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு கலெக்டர் கடும் எச்சரிக்கை

வாடிக்கையாளர்களுக்கு தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களை கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு கலெக்டர் தண்டபாணி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-06-14 23:15 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பொருத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொருத்துதல் கட்டணமாக 200 ரூபாயை பெற்றுக்கொண்டு, உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்சுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு சில உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்சுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்சுகளை அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி வினியோகிப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வருகிறது. எனவே அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு வழங்கும் செட்டாப் பாக்சுகளை பொருத்தாமல் தனியார் செட்டாப் பாக்சுகளை பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்சுகளை வினியோகம் செய்யாமல், அரசுக்கு செலுத்த வேண்டிய மாத சந்தா மற்றும் நிலுவைத்தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துக்கொண்டு சரியான இணைப்புகளின் எண்ணிக்கையை தெரிவிக்காமல் அரசு கேபிள் டி.வி.க்கு எதிராகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் உரிமம் பெற்ற உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸ் வினியோகம் செய்யாத பட்சத்தில் புதிய ஆபரேட்டர்களை பதிவு செய்து உரிமம் வழங்கி அரசு செட்டாப் பாக்ஸ் இல்லாத இடங்களில் வினியோகிக்குமாறு அரசு கேபிள் டி.வி. மேலாண்மை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

எனவே பொதுமக்களின விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி தனியார் நிறுவன செட்டாப் பாக்சை பொருத்த அதிக பணம வசூலிக்கும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் 18004252911 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இவ்வாறு கலெக்டர் தண்டபாணி கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்