மாணவர்கள், இளைஞர்கள் ரத்ததானம் செய்ய வேண்டும் - கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை

மாணவர்கள், இளைஞர்கள் ரத்ததானம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2018-06-14 23:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவை இணைந்து உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் மற்றும் ரத்ததானம் வழங்கியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நேற்று விழுப்புரம் செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் நடத்தியது.

முகாமை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்த 200 பேருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

ரத்தம் கொடுப்பது அரிய பணி. இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. அனைவரும் தொடர்ந்து ரத்ததானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் 3 மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்ய வேண்டும். இவ்வாறு ஆண்டுக்கு 4 முறை ரத்ததானம் செய்வதன் மூலம் 16 உயிர்களை காப்பாற்றக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் அதிகளவில் முன்வந்து உயிர்களை காப்பாற்றும் பணியை செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் அதிக தூரம் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளது. வெகு தொலைவு வாகனங்களை ஓட்டி வருபவர்கள் சோர்வு காரணமாகவும், தூக்கமின்மை காரணமாகவும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அவ்வாறு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ரத்தத்தை சேகரித்து வைத்திருக்க வேண்டும். எனவே மாணவர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சுந்தர்ராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், ஜெமினி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ரவிசங்கர், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கரநாராயணன், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் சுகந்தன், காசநோய் பிரிவு துணை இயக்குனர் சுதாகரன், தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் தர்மலிங்கம், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்