வனப்பகுதியில் குற்றங்களை தடுக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணி

சித்தேரி வனப்பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் வகையில் வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-14 22:45 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் மொத்த நிலப்பரப்பில் சுமார் 40 சதவீத வனப்பரப்பை கொண்டதாகும். தமிழகத்தில் அதிக வனப்பரப்பை கொண்ட மாவட்டங்களில் தர்மபுரி 2-ம் இடத்தில் உள்ளது. தேசிய வனக்கொள்கைப்படி மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். தேசிய சராசரியை விட அதிக வனப்பகுதி கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் தாவர இனங்கள், வன விலங்கினங்கள், பறவை இனங்கள், ஊர்வன, பூச்சிகள் போன்ற பல்வேறு வன உயிரினங்கள் வாழ்கின்றன.

இதேபோல் யானை, கரடி, காட்டெருமை, எரும்பு திண்ணி, மலைப்பாம்பு, நரிகொம்பு மான், புள்ளி மான், கழுதைபுலி உள்ளிட்ட அரியவகை வன விலங்குகள் இந்த வனப்பகுதியில் உள்ளன. சந்தனம், தேக்கு உள்ளிட்ட பல அரிய வகை மரங்களும் தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் காணப்படுகின்றன. வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட வனக்குற்றங்களை தடுக்க வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கண்ணன் தலைமையில் அரூர் வனச்சரகர் தங்கராஜ், வன வனச்சரக அலுவலர் தமிழரசன், வனக்காப்பாளர்கள் கிருஷ்ணன், செல்வராஜ், அன்பரசன் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வனப்பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சித்தேரி வனப்பகுதி நொச்சிக்குட்டை காப்புக்காடு மற்றும் தொம்மக்கல் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.வனக்குற்றங்களை தடுக்கும் வகையில் நடந்த இந்த ரோந்து பணியின்போது மேற்கண்ட பகுதிகளில் வன ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? வன விலங்குகளை வேட்டையாடுதல், வனத்தில் உள்ள மரங்களை வெட்டுதல் ஆகிய சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ரோந்து பணி குறித்து உதவி வனப்பாதுகாவலர் கண்ணன் கூறுகையில், வன விலங்குகளை வேட்டையாடுதல், வனத்தில் உள்ள மரங்களை வெட்டுதல், வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்