ஈரோட்டில் அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோட்டில் அடுத்தடுத்து 3 கடைகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-06-14 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு ஆசிரியர்காலனி உழவன்நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் பழையபாளையம் பெருந்துறை ரோட்டில் 2 துணிக்கடைகள், ஒரு செருப்புக்கடை என 3 கடைகளை அடுத்தடுத்து வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைகளின் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையின் ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது 3 கடைகளிலும் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. உடனே பணம் வைக்கப்பட்ட பெட்டியை பார்த்தபோது, அது உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டுபோய் இருந்தது தெரிய வந்தது. மேலும், ஒரு கடையின் மேற்கூரையும் உடைக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் ஒரு கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர்.

3 கடைகளின் பின்பகுதியிலும் பொது வழிப்பாதை உள்ளது. எனவே மர்மநபர்கள் மற்ற 2 கடைகளுக்கு உள்ளே எளிதாக நுழைந்து பணத்தை திருடிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மொத்தம் ரூ.1 லட்சமும், ஒரு கணினியும் திருட்டுபோனது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடைகளில் பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதேபோல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் திருட்டு சம்பவம் நடந்தது. அங்கும், மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் உதிரிபாகங்களை திருடிவிட்டு சென்றார். எனவே 2 திருட்டு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டு உள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்