நாகர்கோவிலில் மதுபோதையில் தகராறு: நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு போலீசார் விசாரணை

நாகர்கோவிலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-06-14 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் என்ற அய்யப்பன் (வயது 31), தொழிலாளி. இவரும், இவருடைய நண்பர்களான கீழ ஆசாரிபள்ளத்தை சேர்ந்த பாபு என்ற லியோ பாபு, மணிகண்டன் ஆகியோரும் கூட்டாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இதே போல சம்பவத்தன்றும் 3 பேரும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது மது வாங்கியதற்கு செலவழித்த பணத்தை தருமாறு நண்பர்கள் 2 பேரும் அய்யப்பனிடம் கேட்டனர். ஆனால் அய்யப்பன் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பாபுவும், மணிகண்டனும் சேர்ந்து அய்யப்பனை கற்களாலும், கம்பாலும் தாக்கினர்.

இதில் அய்யப்பனுக்கு படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாபு மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் நேற்று மதியம் இறந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது. படுகாயம் அடைந்த அய்யப்பன் இறந்து விட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்துள்ளனர். பின்னர் போலீசார் பாபுவை கைது செய்தனர். மணிகண்டனை தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்