பல்கலைக்கழகத்தில் இணையதளம் மூலம் பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி

இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இணையதளம் மூலம் பாடங்களை பதிவிறக்கும் செய்து படிக்கும் வசதி இருப்பதாக மண்டல இயக்குனர் மோகனன் கூறினார்.

Update: 2018-06-14 22:45 GMT
திருச்சி,

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) மதுரை மண்டல இயக்குனர் மோகனன் நேற்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 30 லட்சத்து 70 ஆயிரம் பேர் கல்வி பயின்று வருகிறார்கள். சமுதாயத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளியவர்கள், அடித்தட்டு மக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகள், விவசாயிகள், பல்வேறு இடங்களில் பணிபுரிபவர்களுக்கும் உயர்கல்வி படிக் கும் வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது தான் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல் கலைக்கழகத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழகத்தை விட பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் அதிக அளவில் சேருகிறார்கள்.

தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொலை நிலை கல்வி பாட திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எந்த பட்டப்படிப்பும், மற்ற பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பட்டங்களுக்கு சமமாக கருதப்படும் என்று பாராளுமன்றத்தில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் அதிக அளவில் ஏற்பட்டு இருப்பதால் இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பட்டம், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தேதி இளநிலை வகுப்புகளுக்கு வருகிற 30-ந்தேதி வரையும், முதுகலை படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி ஜூலை 15-ந்தேதி வரையும் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 320 பாடத்திட்டங்கள் உள்ளன. விண்ணப்பங்களை இணைய தளத்தின் மூலமும் அனுப்பலாம். இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக படிப்பில் சேருபவர்கள் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் பாடங்களை பதி விறக்கம் செய்து கொண்டு படிக்கும் வசதி இந்த கல்வியாண்டு முதல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு தகவல் பாதுகாப்பு என்ற முதுகலை பட்டயப்படிப்பு மற்றும் முதலுதவி, பழங்குடியினர், அம்பேத்கர் வரலாறு ஆகிய பட்டய படிப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. மதுரை மண்டலத்தில் திருச்சி உள்பட 16 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு நேரடி படிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பட்டய படிப்பு மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மண்டல இயக்குனர் மோகனன் தொடங்கி வைத்து பேசினார். மண்டல உதவி இயக்குனர் அன்பழகன், திருச்சி மைய ஒருங்கிணைப்பாளர் காட்வின் பிரேம்சிங் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்