பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பிளஸ்-2 மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2018-06-14 23:00 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் தாலுகா பழையகூடலூர் வடக்குத்தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகள் வள்ளி (வயது 17). இவர், பழையகூடலூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி வள்ளியை, சரியாக படிக்கவில்லை என்று கூறி அந்த பள்ளியின் ஆசிரியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வள்ளி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் உடலை வாங்க மறுத்தனர். மேலும், மாணவி மரணத்துக்கு காரணமான பள்ளி ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின்படி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக, மாணவியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் நாகை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடேசன், சாமிநாதன், சேகர் ஆகியோர் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது மாணவியின் உறவினர்கள், பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் விமல் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், 3 நாட்களுக்குள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் நேற்று மதியம் 1 மணி அளவில் மாணவியின் உடல் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரான பழையகூடலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

மேலும் செய்திகள்