சாட்சி சொல்ல வருபவர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சாட்சி சொல்ல வருபவர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2018-06-14 22:45 GMT
மதுரை,

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் என்ற மாரிதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 22-ந்தேதி பேரணி சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிலும், மறுநாள் நடந்த துப்பாக்கி சூட்டிலும் மொத்தம் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த 243 வழக்குகளில் 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நபர் ஆணைய விசாரணை முன்பு சாட்சியம் அளிக்கச் செல்லும் நபர்களை தூத்துக்குடி மாவட்ட போலீசார் விசாரணை என்ற பெயரில் கைது செய்கின்றனர்.

சாட்சி சொல்ல முன்வரும் பொதுமக்களை போலீசார் கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்க டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஐகோர்ட்டு கண்காணிப்பின்கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்