பாதுகாவலர்களை தாக்கி ரெயில்வேக்கு சொந்தமான ரூ.16½ லட்சம் கொள்ளை

மான்கூர்டில் பாதுகாவலர்களை தாக்கி வேனில் இருந்த ரெயில்வேயின் ரூ.16½ லட்சத்தை கொள்ளையடித்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-06-15 00:06 GMT
மும்பை,

மும்பை துறைமுக வழித்தடத்தில் உள்ள மான்கூர்டு ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் வசூலான ரூ.16 லட்சத்து 58 ஆயிரத்தை வாங்கி கொண்டு நேற்றுமுன்தினம் மாலை தனியார் பாதுகாப்பு நிறுவன வேன் ஒன்று டிராம்வே நோக்கி சயான் - பன்வெல் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அந்த வேனில் 3 பாதுகாவலர்கள் இருந்தனர். அந்த வேன் மான்கூர்டு மேற்கு தோபிகாட் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு கார் வேனை வழிமறித்தது.

அதில் இருந்து முகமூடி அணிந்த 4 பேர் இறங்கினார்கள். அவர்கள் கையில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். ஒருவர் வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார். மற்ற3 பேரும் சேர்ந்து வேனில் இருந்த பாதுகாவலர்கள் 3 பேரையும் அடித்து உதைத்து கட்டி போட்டனர்.

பின்னர் வேனில் இருந்த பணப்பெட்டியை தூக்கி கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர். வேனில் இன்னொரு பெட்டியில் ரூ.37 லட்சம் இருந்தது. அதை கொள்ளையர்கள் கவனிக்கவில்லை. இதனால் அந்த பணம் தப்பியது.

இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மான்கூர்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாவலர்களின் கட்டுகளை அவிழ்த்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து வேன் டிரைவர் பவன் சவான் (வயது21) புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை. இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் கொள்ளையர்கள் வந்த காரின் பதிவெண் கிடைத்து உள்ளது. இருப்பினும் அது போலி எண்ணாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவத்தில் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். மேலும் கொள்ளையர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்