சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது 40 பவுன் நகைகள் பறிமுதல்

வளசரவாக்கம் பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-06-16 22:29 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் பகுதியில் தொடர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனால் துணை கமிஷனர் அரவிந்தன் உத்தரவின் பேரில் வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, அவர்கள் மாறுவேடத்தில் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டபோது, அவரது பெயர் கார்த்திக் என்ற கார்த்திகேயன் (வயது 31) என்றும், போரூரை அடுத்த கெருகம்பாக்கம் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து கார்த்திக் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், வளசரவாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் கைவரிசையை காட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அவரிடம் இருந்து சுமார் 40 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்