கட்டுடல் ஒருபுறம்.. கவலை மறுபுறம்.. ஆண் அழகன் வாழ்க்கையில் முழு ஆனந்தம் ஏற்படுமா?

குடிசை வீட்டில் வசிக்கும் வாலிபர் உலக அளவிலான ஆணழகன் போட்டியில் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருடைய பெயர் பிரதாப்.

Update: 2018-06-17 07:11 GMT
குடிசை வீட்டில் வசிக்கும் வாலிபர் உலக அளவிலான ஆணழகன் போட்டியில் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருடைய பெயர் பிரதாப். 23 வயது இளைஞரான இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர். வறுமையின் பின்னணியில் வாழ்ந்தாலும் கட்டுமஸ்தான உடலழகை பேணும் ஆர்வமும், ஆணழகன் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை தேடித் தரும் இளமை துடிப்பும் அவரிடம் வெளிப்படுகிறது. அதன் தாக்கமாக ஆசிய அளவில் மங்கோலியாவில் நடந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். அதைத்ெதாடர்ந்து வருகிற நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வாகி இருக்கிறார்.

பிரதாப்பின் தந்தை தசரதன் லாரி டிரைவர். தாயார் ராஜாத்தி குடும்ப தலைவி. பிரிதிவிராஜ் என்ற சகோதரனும், ரம்யா என்ற சகோதரியும் இருக்கிறார்கள். பிரதாப்பிற்கு சிறு வயதில் இருந்தே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் குடும்ப வறுமைச்சூழல் அவருடைய விருப்பத்திற்கு மட்டுமல்ல, படிப்புக்கும் தடைக்கல்லாக அமைந்துவிட்டது. 10-ம் வகுப்பு முடித்ததும் குடும்ப வருமானத்திற்காக தந்தைக்கு தோள் கொடுக்க கூலி வேலைக்கு செல்லத் தொடங்கி இருக்கிறார். நியாயவிலை கடைகளுக்கு லாரிகளில் வரும் அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு வகைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளியாகியிருக்கிறார். அதே நேரத்தில் கட்டுக்கோப்பாக உடலைப் பேணுவதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். அவருடைய உடல் தன்மையை பார்த்த சக தொழிலாளர்கள் ஜிம்முக்கு சென்று உடல் திறனை மேலும் வலுப்படுத்து மாறு கூறியிருக்கிறார்கள். அதுவே ஆணழகன் போட்டிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.

‘‘நான் குடும்ப சூழ்நிலையால் 17 வயதிலேயே சுமை தூக்கும் தொழில் செய்ய தொடங்கி விட்டேன். சக தொழிலாளர்கள் என்னை ஊக்கப் படுத்தியதால் சுமை தூக்கும் தொழில் செய்யும்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஜிம்முக்கு செல்ல தொடங்கினேன். அங்கு பயிற்சியாளர் பாலாஜி என் உடல் அமைப்பை பார்த்துவிட்டு ‘ஆணழகன் போட்டிக்கான அத்தனை தகுதியும் உன்னிடம் இருக்கிறது. முறையாக பயிற்சி பெற்றால் போட்டியில் நீ சாதிக்கலாம்’ என்று உற்சாகப்படுத்தினார். பயிற்சிக்கான அத்தனை உதவிகளையும் அவர் செய்தார்’’ என்கிற பிரதாப் ஆணழகன் போட்டிக்கான உடல் அமைப்பை பெறுவதற்கு கடும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்.

‘‘ஆணழகன் போட்டிக்கு தயாராகுவதற்கு கால்கள், தொடை, மார்பு, கைகள், தோள்பட்டை, முதுகு ஆகிய பகுதிகளை விரிவடைய செய்யும் பயிற்சிகள் செய்ய வேண்டும். அதற்கேற்ப சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் பயிற்சி மிக கடினமாக இருந்தது. அதற்கேற்ப சத்தான உணவுகளை சாப்பிட வாய்ப்பில்லாமல் போனதால் அடிக்கடி சோர்ந்து போய்விடுவேன். கால்கள், தொடை பகுதி தசைகளை நெகிழ்வடைய செய்வதற்கு முகுது பகுதியில் 200 கிலோ வரை எடையை வைத்துக்கொண்டு குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால் கால்கள், தொடைகளில் கட்டி போன்று தசைகள் பெரிதாக மாறும். அதேவேளையில் மூட்டு பகுதியில் கடும் வலி ஏற்படும். மார்பு பகுதியை விரிவடைய செய்வதற்கு பெஞ்சில் படுத்து மார்பை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். தம்பிள்ஸ் பயன்படுத்தி கைகளின் தசைகளை மெருகேற்ற வேண்டும்.

ஆரம்பத்தில் ஒவ்வொரு உடல் உறுப்பையும் வலுப் படுத்தும் பயிற்சிகள் கடுமையாக இருந்ததால் விரைவில் சோர்ந்து போய்விடுவேன். உடலில் உள்ள சக்திகள் அனைத்தையும் இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். உடல் உறுப்புகளெல்லாம் சுளுக்கு பிடித்தது போல வலி எடுக்கும். புரோட்டின் பவுடர்தான் ‘எனர்ஜி டானிக்’ காக கைகொடுக்கும். சத்தான உணவுகள் கிடைக்காமல் பல நாட்கள் அவதிப்பட்டிருக்கிறேன்.

இப்போது ஆணழகன் போட்டிக்கு என் உடல் பழக்கப்பட்டு விட்ட தால் பயிற்சிகள் எளிதாகிவிட்டது. எனினும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளாமல் போனால் உடல் வலுவிழந்துவிடும். உணவு கட்டுப்பாடும் அவசியம். புரோட்டின் சத்து நிறைந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். நான் அரிசி சாதம் சாப்பிடுவதில்லை. சப்பாத்தி, களி, கூழ் ஆகியவற்றைத்தான் அதிகம் சாப்பிடுகிறேன். தினமும் 30 முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட வேண்டும். சில சமயங்களில் அப்படி சாப்பிட முடிவதில்லை. கோழி இறைச்சியின் நெஞ்சு பகுதி, மாட்டிறைச்சி, பிராக்கோலி, பீன்ஸ், முட்டைக்கோஸ், ஆரஞ்சு, மாதுளம் பழம், ஆப்பிள் போன்றவற்றைகளை அதிகம் சாப்பிட வேண்டும். நான் பழ வகைகளில் மா, பலா, வாழை ஆகிய மூன்றையும் சாப்பிடுவதில்லை. அவை உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும்’’ என்கிறார்.

வெளிநாட்டு வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவதற்கு உணவு பழக்க வழக்கங்களிலும், உடற்பயிற்சியிலும் அவர்கள் காட்டும் ஆர்வம்தான் காரணம் என்பது பிரதாப்பின் கருத்தாக இருக்கிறது. தன்னை போன்று வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி மற்ற வீரர்களுக்கும் போதிய வசதிகள் கிடைப்பதில்லை என்றும் ஆதங்கப்படு கிறார்.

‘‘வெளிநாட்டினர் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்கு ஏற்ப இயற்கையாகவே அவர்களுடைய உடல் அமைப்பு அமைந்திருக்கும். அந்த அளவிற்கு உணவிலும், பயிற்சியிலும் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் சாப்பிடும் புரோட்டின் சார்ந்த உணவுகள் தரமானதாக இருக்கும். ஆனால் இங்கு விற்பனை செய்யப்படும் புரோட்டின் பவுடர்களில் கலப்படமும் இருக்கிறது. வெளிநாட்டில் இருந்துதான் வரவழைக்கும் நிலை இருக்கிறது. அங்கு போட்டியில் பங்கேற்கும் வீரருடன் ஒரு டாக்டர், நியூட்ரிஷியன், பயிற்சியாளர் போன்றவர்கள் உடன் இருப்பார்கள். இடையிடையே உடல் நெகிழ்வடைய மசாஜ் செய்பவர்களும் இருப்பார்கள். உடல் கட்டுக்கோப்புத்தன்மையை கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். எந்த சமயத்தில் எதை சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பதை உடன் இருந்து அறிவுறுத்துவார்கள். அவர்கள் சாப்பிடும் உணவுகள் தரமானதாக இருக்கும். உடற்பயிற்சி மையங்கள் ‘ஹை டெக்’காக இருக்கும். ஆனால் நம்நாட்டு வீரர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய வசதி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. உடல் திறனை மேம்படுத்தி போட்டியில் வெல்வதற்கு மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு போட்டிக்கு செல்வதற்கும் கடுமையாக போராட வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.

பிரதாப் வேலூர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும் பெற்றிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் 60 கிலோ பிரிவில் தங்கப் பதக்கமும், காட்பாடியில் நடந்த மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் தங்கப் பதக்கமும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார். ராஜஸ்தானில் நடந்த ஜூனியர் மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். ஆசிய அளவில் மங்கோலியாவில் நடந்த போட்டியில் 43 நாடுகள் பங்கேற்றன. அதில் இந்தியா சார்பில் பிரதாப் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். 52 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்திய அளவில் பிரதாப் தான் முதலிடம் பிடித்திருக்கிறார் என்பது சிறப்பம்சம். இத்தாலியில் நடைபெற இருக்கும் உலக ஆணழகன் போட்டிக்கு தற்போது தன்னை தயார்படுத்தி வருகிறார்.

போட்டிகளில் வெற்றிகளை குவித்தாலும் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கி இருக்கிறார். வறுமை பிரதாப்பின் கட்டுடல் பராமரிப்புக்கு மட்டுமின்றி போட்டியில் பங்கேற்பதற்கும் தடையாக அமைந்திருக்கிறது.

‘‘கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சியின் காரணமாக வெற்றியை பெற்று, அதனை தக்க வைக்க முடிந்தது. பயிற்சியாளர் பாலாஜி மற்றும் ஜிம்முக்கு வரும் நண்பர்கள் எனக்கு நன்கு ஊக்கம் அளித்தனர். நமது மாநிலம், வெளி மாநிலம், வெளி நாட்டில் நடந்த போட்டிகளில் பங்கேற்க தன்னார்வலர்கள் சிலரும் எனக்கு உதவினர். இத்தாலியில் நடைபெறும் போட்டிக்கு பயிற்சி மேற்கொள்வதற்கும், சென்று வருவதற்கும் போதிய அளவில் பண வசதி இல்லை. உலக போட்டியில் பங்கேற்பதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. ஜிம்முக்கு வருபவர்கள் என் நிலைமையை புரிந்து கொண்டு பண உதவி செய்கிறார்கள். தற்போது ஜிம்மில் வேலை பார்த்து வருகிறேன். அதில் வரும் வருமானத்தையும் சேமித்து வைத்திருக்கிறேன். நண்பர்களும், தமிழ்நாடு பாடி பில்டிங் பிட்னஸ் பெடரேஷன் நிர்வாகிகளும் உறுதுணையாக இருக்கிறார்கள். அரசு தேவையான உதவிகளை செய்தால் என்னால் மேலும் சாதனை படைக்க முடியும்’’ என்கிறார்.

உதவிக்கரங்கள் இவரது உலக சாதனைக்கு வலுசேர்க்கட்டும்!

மேலும் செய்திகள்