கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி ஏரியில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்

கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-18 22:58 GMT
கொண்டலாம்பட்டி,

கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டி ஊராட்சியில் கொட்டநத்தான் ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியை சுற்றி ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை 10.30 மணிக்கு ஏரிக்குள் இறங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் முகத்தில் கவசம் அணிந்து இருந்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் கூறும் போது, கொட்டநத்தான் ஏரியில் சாயப்பட்டறை கழிவுநீர், இரும்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. மேலும் இரவு நேரத்தில் சிலர் வாகனங்களில் கழிவுநீரை கொண்டு வந்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஏரி மாசு படுவதால், மீன்கள் செத்து மிதக்கின்றன. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், ஏரியை தூர்வாரி, தூய்மைப்படுத்த வேண்டும். மழைநீர் வருவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொண்டாலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. அவர்கள் ஏரியை தூய்மைப்படுத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மனோன்மணி எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. குமரேஸ்வரன், தெற்கு தாசில்தார் சுந்தர்ராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் அங்கு வந்தனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் பொதுமக்கள், உடனடியாக கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஏரியை தூய்மைப்படுத்துவதாக இருந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதற்கு அதிகாரிகள், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் காலை 11.30 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பின்னர் அதிகாரிகள் உடனடியாக துர்நாற்றம் வீசுவதை தடுக்க மருந்து தெளித்தனர். கிராம மக்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்