4 கண்ணாடி குவளைகள் மீது அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவி

நீர்நிலைகளை பாதுகாத்தல் குறித்து 4 கண்ணாடி குவளைகள் மீது அமர்ந்து யோகா செய்து அரசு பள்ளி மாணவி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2018-06-19 22:42 GMT
திருவண்ணாமலை,

நீர்நிலைகளை பாதுகாத்தல், பிளாஸ்டிக் இல்லா உலகம், மழை தரும் மரம் வளர்ப்பு போன்றவற்றை வலியுறுத்தி திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மூலம் கிரிவலப்பாதையில் உள்ள அக்னி தீர்த்தம் அருகில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி கல்பனா 4 கண்ணாடி குவளைகள் மீது 2 மர நாற்காலிகள் வைத்து அதன் மீது 4 கண்ணாடி குவளைகள் வைத்து அதில் அமர்ந்து பத்மாசனம் மற்றும் தாராசனம் யோகாவை செய்து காண்பித்தார். கண்ணாடி குவளைகள் மீது சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் கல்பனா அமர்ந்து யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவியை பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கையோடு வாழ நாம் அனைவரும் கற்று கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க தனிப்பட்ட மனிதராக இல்லாமல், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும். வருகிற 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஆரம்பமாக இது உள்ளது’ என்றார்.

நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளரும், சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் கழக நிறுவனருமான சுரேஷ்குமார், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ்சாமுவேல் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை உலக சிவனடியார் கள் ஒன்றிணைப்பு திருக் கூட்டத் தை சேர்ந்த ஏழுமலை, சிவஈஸ்வரன் மற்றும் பலர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்