பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனு வாங்கினார்.

Update: 2018-06-24 23:21 GMT
சேலம்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ரோகிணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் ஓமலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்துவிட்டு மதியம் 1.50 மணிக்கு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார்.

இதையடுத்து அங்கு வரிசையாக நின்ற பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். பிறகு பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அங்கிருந்த கலெக்டர் ரோகிணி மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அப்போது, ஓமலூர் அருகே எறங்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி துரைசாமி என்பவர், தனக்கு மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு அளித்தார். இதையடுத்து அவருக்கு உடனடியாக மூன்றுசக்கர சைக்கிள் வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம்.பி., சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடாசலம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு முதல்-அமைச்சர் வீட்டிற்கு மனு கொடுக்க வந்துவிடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர், ராசிபுரத்தில் அமைச்சர் தங்கமணியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்