ஓடும் ரெயிலில் 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு - மர்ம நபருக்கு வலைவீச்சு

காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-06-26 22:45 GMT
ஜோலார்பேட்டை,

கேரள மாநிலம் பாலக்கோட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி அருணாஸ்ரீ (வயது 48). இவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்துகொண்டார். பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஐதராபாத்தில் இருந்து காட்பாடி வழியாக திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 10-வது பெட்டியில் 4-வது இருக்கையில் பயணம் செய்தார்.

அருணாஸ்ரீ மற்றும் அவருடன் பயணம் செய்த அனைவரும் இரவு நேரம் என்பதால் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரெயில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. சிறிது நேரத்துக்கு பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. காட்பாடியை அடுத்த யார்டு அருகே ரெயில் மெதுவாக சென்றது. அப்போது அருணாஸ்ரீ கழுத்தில் கிடந்த ஒரு பவுன் சங்கிலியை திடீரென மர்மநபர் பறித்தார்.

அதனால் திடுக்கிட்டு எழுந்த அருணாஸ்ரீ திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சக பயணிகள் அனைவரும் எழுந்தனர். இதற்கிடையே தங்க சங்கிலியை பறித்த மர்மநபர் மெதுவாக சென்ற ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்.

இதுகுறித்து அருணாஸ்ரீ ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து தங்க சங்கிலி பறித்து தப்பியோடிய மர்மநபரை தேடி வருகிறார்.

இதேபோல் அதே ரெயிலில் பயணம் செய்த மற்றொரு பெண்ணிடமும் மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்றதாகவும், அந்த பெண் புகார் அளிக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்