குற்றாலம் சென்று விட்டு திரும்பிய போது விபத்து: லாரி-கார் மோதல்; இளம்பெண் பலி

கயத்தாறு அருகே லாரி-கார் மோதிக் கொண்ட விபத்தில் இளம்பெண் பலியானார். குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். குற்றாலம் சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது.

Update: 2018-07-01 22:30 GMT
கயத்தாறு,

திருச்சி மாவட்டம் பாலக்கரை ஆழ்வார்தோப்பு தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 34). இவருடைய மனைவி அனிஸ் பாத்திமா (27). இவர்களுடைய மகன் அமீது (2). இஸ்மாயில் தனது மனைவி, குழந்தை, உறவினர்களுடன் தனது காரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் குற்றாலத்திற்கு வந்தார். அவர்கள் அங்குள்ள அருவிகளில் குளித்து விட்டு நேற்று முன்தினம் மாலையில் காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை இஸ்மாயில் ஓட்டினார்.

கார் நெல்லை- மதுரை சாலையில் கயத்தாறு அருகே கட்டபொம்மன் சிலையை தாண்டி சென்ற போது, கயத்தாறில் இருந்து கழுகுமலை நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக காரின் மீது மோதியது.

இதில் காரில் இருந்த இஸ்மாயில், அவருடைய மனைவி அனிஸ் பாத்திமா, மகன் அமீது, உறவினரான பாத்திமா (45), முகைதீன் மகள் ஆயிஷா (1½) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் காரில் இருந்த முகைதீன் என்பவர் மட்டும் காயமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இரவில் சிகிச்சை பலனின்றி அனிஸ் பாத்திமா பரிதாபமாக உயிர் இழந்தார். மற்ற 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் தெற்கு அரியகுளத்தை சேர்ந்த முருகன் (47) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்