மைசூரு அரண்மனைக்கு வந்து செல்லும் கேரள போலி சாமியார் - போலீஸ் விசாரணை

மைசூரு அரண்மனைக்கு வந்து செல்லும் கேரள போலி சாமியார், பாதுகாப்பு அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து அதிகாரம் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-07-01 23:36 GMT
மைசூரு,

மைசூரு அரண்மனையின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் சைலேந்திரா. கடந்த சில நாட்களாக கேரளாவில் இருந்து துளசிதாஸ் என்பவர் அரண்மனைக்கு வருவதாகவும், அவர் ஒரு சாமியார் போல் செயல்படுவதாகவும், அவரை அரண்மனை பாதுகாப்பு அதிகாரி சைலேந்திரா மிக மரியாதையுடன் கவனித்து அழைத்துச் செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.

மேலும் அந்த துளசிதாஸ், பாதுகாப்பு அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து அதிகாரம் செய்வதாகவும், தனக்கு வேண்டப்பட்டவர்களை அங்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு அதிகாரி சைலேந்திரா உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் யாரும் எளிதில் செல்ல முடியாத தங்க சிம்மாசனம் உள்ள பகுதிக்கு அந்த துளசிதாஸ் சாதாரணமாக சென்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார். இதையறிந்த சைலேந்திரா அந்த போலீஸ்காரரை உடனடியாக அங்கிருந்து பணி இடமாற்றம் செய்தார். மேலும் அவருடைய உயர் அதிகாரிகள் மூலம், அவரை பணி இடைநீக்கமும் செய்தார்.

இந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த துளசிதாஸ் சாமியார் இல்லை என்பதும், அவர் ஒரு போலிச்சாமியார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் துளசிதாசுக்கும், சைலேந்திராவுக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வருவதாகவும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இப்பிரச்சினை குறித்து தீவிர விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். இதற்கிடையே இப்பிரச்சினை குறித்து அறிந்த கன்னட அமைப்பினர் நேற்று மைசூரு அரண்மனை பாதுகாப்பு அதிகாரியின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த அரணமனை அதிகாரிகள், விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கன்னட அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், போலி சாமியார் துளசிதாசை இனி அரண்மனைக்குள் விடக் கூடாது, துளசிதாசுக்கும், சைலேந்திராவுக்கும் இடையேயான பணப்பரிமாற்றம், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரரை உடனடியாக திரும்ப பணிக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், உடனடியாக இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கன்னட அமைப்பினர், தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்