அனைவருக்கும் தொடர்ந்து இலவச அரிசி வழங்கப்படும் - நாராயணசாமி உறுதி

அனைவருக்கும் தொடர்ந்து இலவச அரிசி வழங்கப்படும். இதற்காக ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Update: 2018-07-02 23:35 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தில் மத்திய அரசு உதவியுடன் ரூ.9 கோடி செலவில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 700 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதியுதவி செய்யப்படும். இந்த வருடம் 21 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும், இலக்கியத்தில் சிறந்த 16 பேருக்கு தொல்காப்பியர் விருதும், 10 பேருக்கு கம்பன் புகழ் இலக்கிய விருதும், 8 பேருக்கு நேரு சிறுவர் இலக்கிய விருதும் வழங்கப்படும்.

மிகவும் வறுமை நிலையில் உள்ள சுமார் 27 ஆயிரம் உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு உணவு பங்கீட்டு அட்டை ஒன்றுக்கு 35 கிலோ அரிசிக்கு ஈடாக ரூ.933 வீதம் வழங்கப்படுகிறது. இதேபோல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 1½ லட்சம் அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசிக்கு ஈடாக ரூ.133 வீதம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

ஏழைகளின் சிரமத்தை கருத்தில்கொண்டு எனது அரசு மானியத்தொகையை பணமாக இல்லாமல் பயனாளிகளுக்கு அரிசியாகவே வழங்க மத்திய அரசிடம் கோரியது. இதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக நேரடியாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொது வினியோக திட்டத்தை சீரமைக்கும் விதமாக உயிரளவியலை (பயோ மெட்ரிக்) அடிப்படையாக கொண்ட சிறுவடிவ கையடக்க உணவு பங்கீட்டு அட்டை (ஸ்மார்ட் ரேசன் கார்டு) 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டைகளில் பதிக்கப்பட்ட வில்லைகள் (சிப்) வழக்கொழிந்துவிட்டதாலும், இவற்றில் ஒரு குடும்பத்தில் இருவருக்கு மேற்பட்டவர்களின் விவரங்களை உள்ளடக்க இயலாததாலும், ஆதார் அடிப்படையிலான பொதுவினியோக தீர்வுக்கு மாறிவிட அரசு முடிவு செய்துள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் மிகவும் வறுமை நிலையில் உள்ள அட்டைதாரர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 20 கிலோ இலவச அரிசியும், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசியும் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் கூடுதல் நிதி திருத்திய மதிப்பீட்டு வரவு- செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும்.

தொடக்க கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் கடன்தொகையை முறையாக திருப்பி செலுத்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம் 5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகவும், கடனை முறையாக திருப்பி செலுத்தும் இதர உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வட்டி தள்ளுபடி 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் உயர்த்தப்படும்.

தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் விற்பனைக்கு ஆயத்தமான கைத்தறி தயாரிப்புகளுக்கு நெசவுக்கூலியில் 50 சதவீதம் மற்றும் நூல் கொள்முதல் விலையில் 50 சதவீதம் வரையிலும் மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரியூர் பகுதியில் பாண்லேயின் துணை பால் குளிரூட்டும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்