ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-04 22:45 GMT
ஈரோடு,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பல்வேறு மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் தெரிவிக்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் நடந்தது.

இந்த போராட்டத்தால் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் பாஸ்கர்பாபு கூறியதாவது:-

எங்கள் கோரிக்கை தொடர்பாக சென்னையில் அரசு செயலாளர் மற்றும் இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஆனால் நாங்கள் அதை எழுத்து பூர்வமாக எழுதி தர வேண்டும் என்று கேட்டோம். இதை அவர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எங்களுடைய போராட்டம் காரணமாக, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், குடிநீர் பணி, துப்புரவு பணி உள்ளிட்ட அடிப்படை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எங்களுடைய அடுத்த கட்ட போராட்டமாக இன்று (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்