பெரவள்ளூரில் கோஷ்டி மோதல்; 2 ஆட்டோக்கள் சேதம்

பெரவள்ளூரில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

Update: 2018-07-05 22:45 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூர் கோவில் சாலையை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளை நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் வைத்து கொண்டாடினார்.

இந்த பிறந்த நாள் விழாவில் ஜெகனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர். அவரது நண்பர்கள், வீட்டின் வெளியே கோவில் சாலையில் நின்று மதுபானம் அருந்தியபடி, போதையில் அந்த வழியாக சென்றவர்களை பார்த்து கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.

கோஷ்டி மோதல்

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ் மற்றும் அவருடைய நண்பர் சூர்யா இருவரும் தங்களுக்கு வழி விடுமாறு கூறினர். இதனால் இவர்களுக்கும், ஜெகனின் நண்பரான ராஜீ (28) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருந்த ஜெகனின் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதீஷ் மற்றும் சூர்யாவை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

பின்னர் சதீஷ், சூர்யா இருவரும் தங்களது நண்பர்கள் 5 பேருடன் மீண்டும் ஜெகன் வீட்டுக்கு சென்று தங்களை தாக்கியவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை பதிலுக்கு தாக்கினர். இதனால் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் பிறந்த நாள் வீடு போர்க்களமாக மாறியது.

ஆட்டோக்கள் சேதம்

இந்த கோஷ்டி மோதலில் அங்கு நிறுத்தி இருந்த 2 ஆட்டோக்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. 

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பெரவள்ளூர் போலீசார், கோஷ்டி மோதலில் காயம் அடைந்த இருதரப்பையும் சேர்ந்த 4 பேரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இரு தரப்பினரும் தனித்தனியாக போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் சதீஷ் அளித்த புகாரின் பேரில் விஜயகுமார், சரவணன், பிரேம்குமார், சதீஷ்குமார், சரத்குமார், மற்றொரு சதீஷ் ஆகிய 6 பேரையும், ஜெகனின் நண்பர் ராஜீ கொடுத்த புகாரின் பேரில் சதீஷ், சூர்யா, பெரவள்ளூர் கே.சி.கார்டன் பகுதியை சேர்ந்த பரத், ராகுல், ராஜேஷ், சவுந்தரராஜன், விக்னேஷ் ஆகிய 7 பேரையும் என இரு தரப்பினரையும் சேர்ந்த 13 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்