நெல்லையில், 20 புதிய அரசு பஸ்கள் இயக்கம் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்

நெல்லையில் நேற்று 20 புதிய அரசு பஸ்களை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-06 22:30 GMT

நெல்லை,

நெல்லையில் நேற்று 20 புதிய அரசு பஸ்களை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

புதிய பஸ்கள் தொடக்க விழா

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் புதிய அரசு பஸ்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்திமுருகேசன், எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலனில் அக்கறை கொண்டு பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாநிலம் முழுவதும் 515 பஸ்களை சமீபத்தில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.

20 புதிய பஸ்கள்

இதில் நெல்லை மாவட்டத்திற்கு புதிதாக 42 பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் ஏற்கனவே 7 பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது 20 புதிய பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் பல்வேறு வழிதடங்களில் இயக்கப்பட உள்ளது. மீதி உள்ள 15 பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.

சுற்றுச்சுசூல் பாதுகாப்பு கருதியும், வளிமண்டலத்தில் ஏற்படும் மாசுக்களை குறைப்பதற்கும் நவீனரக எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் பஸ்களில் ஒழுகாமல் இருப்பதற்கும் மற்றும் கோடைக்காலங்களில் அதிக வெப்பம் ஏற்படாமல் இருப்பதற்கும் 5 அடுக்குகள் கொண்ட தெர்மோகூலுடன் கூடிய மேற்கூறை அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக

பஸ்சில் கண்டக்டர்கள் கிடையாது. பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க அந்தந்த பஸ் நிலையங்களில் சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டு உள்ளது. கண்டக்டர் இல்லாத பஸ்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதை பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. பொதுமக்களின் வசதிக்காக இந்த புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, அரசு போக்குவரத்து கழக மேலாளர் மணி, பொது மேலாளர் துரைராஜ், முதன்மை நிதி அலுவலர் சங்கர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், பொருளாளர் கணேசராஜா, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், முன்னாள் கடையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சி.ஐ.டி.யு.வினர் போராட்டத்தால் பரபரப்பு

புதிய பஸ்கள் தொடக்க விழாவுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் வருகை தருவதற்கு சற்று முன்னதாக, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீரென நெல்லை புதிய பஸ்நிலையத்துக்கு கண்டக்டர் இல்லாத பஸ்சை முற்றுகையிட வந்தனர். இதில் அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க சங்க தலைவர் காமராஜ், துணை தலைவர்கள் பாலகிருஷ்ணன், பேராச்சி, துணை செயலாளர் கோவிந்தராஜன் ஆகிய 4 பேர் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர், அமைச்சர் உள்ளிட்டோர் புதிய பஸ்களை இயக்கி வைக்கும் விழாவில் பங்கேற்றனர். மேலும், கைதான சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்