ஸ்ரீரங்கத்தில் லாரி டிரைவர் கொலை வழக்கில் கூட்டாளிகளுக்கு வலைவீச்சு உறவினர்களிடமும் போலீசார் விசாரணை

ஸ்ரீரங்கத்தில் லாரி டிரைவர் கொலை வழக்கில் கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து லாரி டிரைவரின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2018-07-06 22:45 GMT
ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் ஆண்டவர்(வயது 44). லாரி டிரைவரான இவர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லாரி திருட்டுகளிலும் தொடர்புடையவர். இவர் மீது ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த 6 மாதமாக ஆண்டவர் சிறையில் இருந்து வந்தார். கடந்த 3-ந் தேதி அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள ஒரு காலி மனையில் நேற்று முன்தினம் காலை அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.


கல்லால் அடித்து அவரது முகத்தை சிதைத்து இருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது.

மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் மோப்பம்பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடி சென்று ஒரு வீட்டின் திண்ணையில் படுத்து கொண்டது. இதையடுத்து அந்த வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த சென்றனர்.

ஆனால் அவர்கள் ஏற்கனவே வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர். கடந்த 4-ந் தேதி இரவு ஆண்டவர் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கூட்டாளிகள் 3 பேருடன் சுற்றி திரிந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆண்டவரின் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்