வில்லுக்குறியில் கோழிப்பண்ணை உரிமையாளரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

வில்லுக்குறியில் கோழிப்பண்ணை உரிமையாளரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2018-07-06 23:00 GMT

நாகர்கோவில்,

இதுபற்றிய விவரம் வருமாறு:-


வில்லுக்குறி வடக்கு நுள்ளிவிளையை சேர்ந்தவர் மிக்கேல் (வயது 42), கோழிப்பண்ணை உரிமையாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அனிஷ் (26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக அனிஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அன்றைய தினம் அனிஷின் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு தீ வைத்தது மிக்கேல் தான் என்று அனிஷ் கருதியுள்ளார். இதனால் அனிஷ் ஆத்திரமடைந்தார்.

இந்த நிலையில் 30-4-2017 அன்று மிக்கேல் தன் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அனிஷ் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மிக்கேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மிக்கேல் பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிஷை கைது செய்தனர். மேலும் கொலைக்கு உதவியதாக சதீஷ், கார்த்திக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி கருப்பையா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனிசுக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கருப்பையா உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. சதீஷ், கார்த்திக் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஞானசேகர் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்