சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்த 53 பேர் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை

சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்த 53 பேரை மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2018-07-06 22:13 GMT

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இக்கரைதத்தப்பள்ளியில் 10 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை தோட்டம் உள்ளது. இந்த பகுதியில் கடம்பூர் மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக கோபி ஆர்.டி.ஓ. அசோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே அவர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தாசில்தார் கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 1.30 மணி அளவில் இக்கரைதத்தப்பள்ளிக்கு சென்று அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், ‘நாங்கள் கடம்பூர் அருகே உள்ள கரளியம், பவளகுட்டை, கடம்பூர், ஒசப்பாளையம், மாமரத்தொட்டி, நொக்கநல்லி, குரும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தோட்ட வேலைக்கு என்று கூறி எங்களை அழைத்து வந்தார்கள். இங்கு தகர கொட்டகை அமைத்து குடும்பத்துடன் தங்கியுள்ளோம். மின்வசதி செய்து கொடுத்தார்கள். பூ எடுத்தல், களை எடுத்தல், உரமிடுதல், மருந்து அடித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகிறோம். எங்களை எங்கும் வெளியில் செல்ல அனுமதிப்பது கிடையாது. கொத்தடிமைகளாக நடத்தி வருகிறார்கள்’ என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கொத்தடிமைகளாக வேலை செய்த பார்வதி (வயது 50), மீனா (20), சதீஷ் (25), ரஞ்சித் (23), பெரியசாமி (5), சுஜாதா (2), மணி (35), செல்வி (28), கண்ணம்மா (38), பழனிசாமி (48), பட்டம்மா (50), செல்வி (45) உள்பட 53 பேரை மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்