ஊட்டி அருகே பைன்பாரஸ்ட் சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது

ஊட்டி அருகே பைன்பாரஸ்ட் சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. அங்கு பூங்கா மற்றும் காட்சி முனை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2018-07-06 22:50 GMT
ஊட்டி,

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. மலைப்பிரதேசமாக உள்ளதால், ஊட்டி நகரை சுற்றிலும் வனப்பகுதிகள் உள்ளன. ஊட்டியை சுற்றி பல இடங்கள் மரங்கள் இல்லாமல் வெட்ட வெளியாக காட்சி அளித்தது. அந்த இடங்களை அழகுப்படுத்துவதற்காக வனத்துறை சார்பில், வெளிநாட்டில் இருந்து பைன் மரக்கன்றுகள் இறக்குமதி செய்யப்பட்டது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதி மற்றும் சோலூர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் பைன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

ஊட்டி தலைகுந்தா அருகே பைன்பாரஸ்ட் (பைன் மரக்காடுகள்) சுற்றுலா தலம் உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இங்கு ஒரு நபருக்கு ரூ.5 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பைன் மரக்காடுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சரிவுகளில் உயரமாக வளர்ந்து உள்ள பைன் மரங்களை கண்டு ரசிப்பதுடன், செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். அங்கு கீழே விழுந்த மரங்கள் இருக்கைகளாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த இருக்கைகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கண்டு களிக்கின்றனர். மேலும் பைன் மரக்காடுகளின் கீழ்பகுதியில் காமராஜ் சாகர் அணையில் எழில்மிகு தோற்றம், இயற்கை அழகை காணலாம்.

ஊட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. அப்போது பைன் மரக்காடுகளில் கீழே நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் இருந்தது. சிலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். மேலும் மழையின் போது சுற்றுலா பயணிகள் ஒதுங்கி நிற்க போதுமான வசதிகள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில், பைன் மரக்காடுகளில் சுற்றுலா பயணிகளுக்காக மேம்பாட்டு பணிகளை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து பைன்பாரஸ்ட் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பைன்பாரஸ்ட் மூடப்பட்டு இருப்பதை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பைன் மரக்காடுகளுக்கு வருகின்றனர். வார விடுமுறை, சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நடைபாதையுடன் கூடிய படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஊட்டி-கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட் முன்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. கீழ்பகுதியில் பல்வேறு மலர் செடிகளை கொண்டு பூங்கா அமைத்து, சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் காட்சி முனை அமைக்கப்பட உள்ளது. அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பைன் பாரஸ்ட் மீண்டும் திறக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்