சாராயம் விற்ற பெண் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

காடாம்புலியூரில் சாராயம் விற்ற பெண் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

Update: 2018-07-06 23:54 GMT
கடலூர், 

காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா மற்றும் போலீசார் கடந்த மாதம் 23-ந்தேதி கருக்கை- செம்மேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முந்திரிதோப்பில் கருக்கை வடக்கு தெருவை சேர்ந்த ஏழுமலை மனைவி மகா என்கிற மகாலட்சுமி (வயது 50) என்பவர் 1,200 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தார்.

இதை அறிந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் மகாலட்சுமியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சாராய வியாபாரியான இவர் மீது காடாம்புலியூர், பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்களில் 4 சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் தண்டபாணி உத்தரவின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா தடுப்பு காவல் சட்டத்தில் மகாலட்சுமியை கைது செய்தார். இதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்