லஞ்சம் வாங்கியதாக புகார்: சின்னசேலம் சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-07-07 00:05 GMT
விழுப்புரம், 

சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது சார்பதிவாளர் சந்திரா மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 730-ஐ போலீசார் கைப்பற்றினர். மேலும் அந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சார்பதிவாளர் சந்திரா, ஆவண எழுத்தர் முருகேசன், அலுவலக உதவியாளர் சோலைமுத்து, ஆவண எழுத்தரின் உதவியாளர் சரத்குமார் ஆகியோர் மீது ‘அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், அரசு பணியை செய்வதற்கு கையூட்டு கேட்டு பெறுதல்’ ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்களின் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக தனியார் தட்டச்சு நிறுவன உரிமையாளர் சுரேஷ் என்பவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்