காலிமனையில் வளர்ந்திருந்த கோரை புற்களில் தீப்பிடித்தது

கும்பகோணம் அருகே காலி மனையில் வளர்ந்திருந்த கோரை புற்களில் தீப்பிடித்தது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் அருகே உள்ள பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டனர்.

Update: 2018-07-06 22:00 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் பொன்னுசாமி நகரில் குத்தூஸ் மகன் முகமதுஅலி(வயது53) என்பவருக்கு சொந்தமான காலிமனை உள்ளது. இந்த மனையை சுற்றி சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக அப்பகுதிக்கு யாரும் செல்லாததால் இந்த மனையில் கோரைப்புற்கள் மற்றும் கருவேல மரங்கள் அதிக அளவு வளர்ந்து காடுபோல காட்சி அளித்தது. நேற்று காலை இந்த கோரை புற்களில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென வேகமெடுத்து எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது.

இந்த இடம் அருகே மீன்மார்க்கெட், 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் மேல்நிலைப்பள்ளி ஐ.டி.ஐ. போன்றவை உள்ளது. திடீரென ஏற்பட்ட புகை மூட்டத்தால் பள்ளி, ஐ.டி.ஐ. மாணவர்கள் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். கோரை புற்களில் எப்படி தீப்பிடித்தது? என தெரியவில்லை. இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காலி மனையில் வளர்ந்திருந்த கோரைப்புற்களில் திடீரென தீப்பிடித்த சம்பவம் கும்பகோணம் பொன்னுசாமி நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்