நில அளவை ஆவணங்களை இணையதளத்தில் பார்வையிட வசதி புகைப்பட கண்காட்சி அமைத்து விழிப்புணர்வு

நில அளவை ஆவணங்களை இணையதளத்தில் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை பதிவேடுகள் துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி நடக்கிறது.

Update: 2018-07-07 00:14 GMT

திருப்பூர்,

தமிழ்நாடு அரசின் பொது நிர்வாகத்தில் முக்கியமான அங்கமாக வருவாய்த்துறையின் பின்புலமாக தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை விளங்கி வருகிறது. இந்த துறை சென்னையில் தனது முதல் நிர்வாக அமைப்பை தொடங்கி இந்த ஆண்டு 160-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த துறை மூலமாக வருவாய் நில அளவை பணியானது அறிவியல் தொழில் நுட்பங்களை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு நில உரிமையாளரின் நிலத்தின் எல்லைகள், வகைபாடு, மண்வகை, தரம், தீர்வை, பரப்பளவு, நில உரிமை ஆகிய நிலத்தின் முக்கிய கூறுகளை சட்டரீதியாக நிர்ணயம் செய்து அரசுக்கு தனிநபர் செலுத்த வேண்டிய நிலத்தீர்வையை செலுத்த வகை செய்கிறது.


தற்போது நில அளவை ஆவணங்கள் அனைத்தையும் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் எங்கேயும், எப்போதும் இணையதளத்தில் பார்வையிடும் வகையில் அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி தேசிய நில அளவை தினமாக கொண்டாடப்படுகிறது.

நில அளவை பதிவேடுகள் துறையின் 160-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து அனைத்து நில அளவை அலுவலர்களையும் பாராட்டினார். இன்று(வெள்ளிக்கிழமை) வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்த கண்காட்சி நடக்கிறது.


தற்போது கணினி வழி பட்டா வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் அனைத்து நில அளவை ஆவணங்களும் கணினி மயமாக்கப்பட்டு இணையவழி சேவை மூலமாக பயனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையவழி வசதி மூலம் பட்டா மாறுதலுக்கான மனுக்கள் பொது சேவை மையம் மூலம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்